×

30 கி.மீ. சென்னை கடற்கரை ரூ.100 கோடியில் மறுசீரமைக்கப்படும் திருமழிசையில் 16.92 ஏக்கரில் ரூ.1,280 கோடியில் குடியிருப்புகள் மற்றும் வணிக வளாகம்: அமைச்சர் சு.முத்துசாமி அறிவிப்பு

சென்னை:தமிழக சட்டப் பேரவையில் நேற்று வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை மானியக் கோரிக்ைக மீதான விவாதத்துக்கு பதில் அளித்த பின்பு அமைச்சர் சு.முத்துசாமி புதிய அறிவிப்புகளை வெளியிட்டு பேசியதாவது:* தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தால் திருமழிசை திட்டப்பகுதியில் 16.92 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.1,280 கோடி மதிப்பீட்டில், பொது மற்றும் தனியார் பங்களிப்புடன் குடியிருப்புகள் மற்றும் வணிக வளாகம் கட்டப்படும்.  * பன்னடுக்கு மாடிக் குடியிருப்புகளுக்கான திட்ட அனுமதி வழங்கும் அதிகாரத்தை சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்திற்கு அரசு வழங்கும். சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தால் மெரினா முதல் கோவளம் இடையேயான சுமார் 30 கி.மீ. நீளமுள்ள சென்னை கடற்கரை ரூ.100 கோடி மதிப்பீட்டில் மறுசீரமைக்கப்பட்டு புத்தாக்கம் செய்யப்படும். * சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தால் நீர்முனை மற்றும் ஏரிக்கரை மேம்பாடு ரூ.100 கோடி செலவில் மேற்கொள்ளப்படும். சென்னையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முக்கிய போக்குவரத்து வழித்தடங்களை ஒட்டி அமைந்துள்ள பகுதிகளுக்கு தளப்பரப்பு குறியீடு அதிகரிக்கப்படும். * செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூரில் புதிய பேருந்து முனையங்கள் சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தால் கட்டப்படும். மாநில அளவில் நகர்ப்புற திட்ட மிடுதலுக்கென தகுதியான அலுவலர்களை கொண்ட தொகுப்பினை, பணி விதிகள் மற்றும் மாற்றுப்பணி நிபந்தனைகளுடன் உருவாக்கப்படும். * தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தால் திருவள்ளூர் மாவட்டம், காக்களூரில் 2.60 ஏக்கர் நிலப்பரப்பில், ரூ.133 கோடி மதிப்பீட்டில் பொது மற்றும் தனியார் பங்களிப்புடன் ஒருங்கிணைந்த குடியிருப்புகள் மற்றும் வணிக வளாகம் கட்டப்படும். தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தால் சென்னை மாவட்டம், திருவான்மியூர், சோழிங்கநல்லூர் (பழைய மாமல்லபுரம் சாலை) மற்றும் மாதவரம் ஆகிய இடங்களில் சுயநிதி திட்டத்தின் கீழ் 3.18 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.105.50 கோடி மதிப்பீட்டில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படும். * கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி வளாகத்தில் நெரிசலை குறைக்கவும், அதன் சிறந்த பயன்பாட்டினை அறியவும் சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தால் ஆய்வு மேற்கொள்ளப்படும். 2ம் முழுமை திட்டத்தில் பெருநகர சென்னை மாநகராட்சி வரம்புக்குள் முன்மொழியப்பட்டுள்ள 40 சாலை விரிவாக்கப் பணிகளில் சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தால் இந்த நிதியாண்டில் 10 சாலை விரிவாக்கப் பணிகள் ரூ.200 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும். * கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் உள்ள 15 ஏக்கர் மற்றும் போரூரில் உள்ள 21 ஏக்கர் திறந்தவெளி ஒதுக்கீடு நிலங்களில் சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தால் பூங்காக்கள் மற்றும் விளையாட்டு மைதானங்கள் ரூ.30 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்படும். *சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழும எல்லைக்குள் வலைபின்னல் சாலை அமைப்பு ரூ.200 கோடி மதிப்பீட்டில் ஏற்படுத்தப்படும். தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தால் சுமார் ரூ.53 கோடியில் வட்டி தள்ளுபடி திட்டம் செயல்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்….

The post 30 கி.மீ. சென்னை கடற்கரை ரூ.100 கோடியில் மறுசீரமைக்கப்படும் திருமழிசையில் 16.92 ஏக்கரில் ரூ.1,280 கோடியில் குடியிருப்புகள் மற்றும் வணிக வளாகம்: அமைச்சர் சு.முத்துசாமி அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai Beach ,Minister ,Suu. Muthusamy ,Chennai ,Tamil Nadu Law Council ,Department of Housing and Urban Development ,Minister Suu. Muthusamy ,
× RELATED இன்று முதல் இயக்கப்படுவதாக அறிவித்த...